இந்தியாவையே உலுக்கிய தெலங்கானா கௌரவக் கொலையில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மாருதி ராவ் பண்ணை வீட்டில் திடீர் தற்கொலை செய்து கொ்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். அம்ருதாவின் தந்தை மாருதிராவ், ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரிய வர, பிரச்சனை வெடித்தது. பிரனய், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்ருதாவிடம் பிரனய் உடனான காதலை முறித்துக்கொள்ளும்படி மிரட்டினார்.

இதையும் படிங்க;- தந்தையை தூக்கிலிடுங்கள்...! கதறும் கர்ப்பிணி!

அம்ருதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுசெய்தார். இதையடுத்து பிரனய் - அம்ருதா, கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கர்பமாக இருந்த அம்ருதாவும் பிரனய்யும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் மர்ம நபர் ஒருவர் பிரனய்யை வெட்டிக் கொலை செய்தார். அந்தச் சம்பவம், சிசிடிவி காட்சியில் பதிவானது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க;-  தொடரும் சாதி வெறி... அடுத்தடுத்து அரங்கேறும் ஆணவக்கொலை... காதலி கதறல்!

இந்த விவகாரம் தொடர்பாக, பீகாரைச் சேர்ந்த கூலிப்படையினரையும், அம்ருதாவின் தந்தையையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், தனது செல்வாக்கு மூலம் அம்ருதாவின் தந்தை ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், பிரனய் குமார் கொலை செய்யப்பட்டு 4 மாதங்கள் கழித்து அம்ருதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், தெலங்கானா கொலை சம்பவம் நடந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலதிபர் மாருதி ராவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.