தெலுங்கானாவில் கடந்த மாதம் அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்த ஸ்வரன் என்ற வாலிபர் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அதேபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சாயிதீபிகாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆகையால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காதல் விவகாரத்தை அறிந்த மாணவி குடும்பத்தினர் குமாரை மிரட்டினர். மேலும் அவர் மீதும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் குமாரை மிரட்டி இனிமேல் மாணவியை பார்க்கவும், பேசவும் கூடாது என்று எச்சரித்து அனுப்பினார். அதன் பிறகு குமார் காதலியை பார்க்காமல் இருந்து வந்தார். அதன்பின் 6 மாதங்களுக்கு பிறகு குமார் சந்தித்து பேசினார். 

பிறகு எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குமாரின் வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குமார் மாயமானார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக குமாரின் சடலம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடலைக் கண்டு காதவி மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர்.

 

இந்த கொலை தொடர்பாக மனைவி சாயிதீபிகா கூறுகையில் போலீசாரின் அலட்சியத்தால் தான் கொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சாதி வெறி தொடர்பாக கொலை நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் தொடர்ந்து இதுபோன்ற ஆவணக்கொலை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.