சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் காவலர் அருணா, சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர் அருணா. கணவர் ஜெயச்சந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

கடந்த சில மாதத்திற்கு முன் தந்தை இறந்ததாலும், தாய் நோய் வாய் பட்டு அவதியுற்று வருவதாலும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். மேலும் கடந்த சில மாதங்களாக, அருணாவும் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று திரும்பினார்.

இந்நிலையில், இவர் நேற்று காலை பணிக்கு செல்ல, உடை மாற்றுவதற்காக அறையின் உள்ளே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால், கணவர் ஜெயசந்திரன் உடை மாற்றும் அறையின் உள்ளே சென்று பார்த்த போது, அருணா மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம், கீழ்ப்பாக்கம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.