சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருக்கிறது சின்னமநாயக்கன்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் ரங்கன். வயது 75. இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதியினருக்கு ரமேஷ் (50), ஜெகதீஷ்(45) என்ற 2 மகன்களும் மஞ்சுளா(40), செல்வி(37) என இரண்டு மகள்களும் உள்ளனர். ரங்கன் விவசாய தொழில் பார்த்து வந்திருக்கிறார் இதனால் அவரிடம் நிலம் இருந்திருக்கிறது.

தனது நிலத்தின் ஒரு பகுதியான 25 சென்ட்டை ரங்கன் தனது கிராமத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு எழுதி கொடுத்திருக்கிறார். அதோடு ஒரு லட்சம் பணமும் சேர்த்து கொடுத்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் தனது தந்தையிடம் தகராறு செய்திருக்கிறார். வீட்டில் மூத்த மகனான என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எப்படி சொத்தை கோவிலுக்கு எழுதி கொடுக்கலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து அவரது தந்தை ரங்கனின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். மேலும் அவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரங்கன் பரிதாபமாக உயிரிழந்தார். அதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதனர். உடனே அக்கம்பக்கத்தினர் இந்த கொலை சம்பவம் குறித்து வாழப்பாடி காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் ரங்கனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலுக்கு சொத்தை எழுதிக் கொடுத்தால் தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது