மொய் பணத்தால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக,  மகனை கணக்கு வழக்கை முடித்து விட்டு முதலிரவுக்கு செல்லுமாறு தந்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆதிச்சனுர் கிராமத்தைச் சேர்ந்த, இளமதி என்பவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.  திருமணத்தின் போது வந்த மொய் பணத்தின், கணக்கு வழக்குகளை தந்தை சண்முகத்துடன் சேர்ந்து கணக்கு போட்டு வந்துள்ளார்.

ஆனால் கணக்குகள் சரிவர வராததால்,  நாளை காலை பார்த்துக்கொள்ளலாம் என தந்தையிடம் கூறி விட்டு இளமதி முதலிரவிற்கு செல்ல தயாரானார். மகனின் செயலால் ஆத்திரமடைந்த அவரது தந்தை சண்முகம்,  கணக்கு வழக்கு பார்த்துவிட்டு பின் முதலிரவுக்கு செல் என இளமதியை தடுத்துள்ளார்.  

இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின் சண்முகம் இளமதியை அருகே கிடந்த கட்டயை எடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.  இளமதி தந்தை கையிலிருந்த கட்டையை பிடுங்கி, அவரை தலையில் ஓங்கி அடித்தது மட்டும் இன்றி, சட்டையை பிடித்து கீழே தள்ளியுள்ளார்.  இதனால் சண்முகம் சுயநினைவை இழந்து கீழே சரிந்தார்.  

சண்முகத்தின் முகத்தில் தண்ணீரை தெளித்தும் அவர் நீண்ட நேரமாக கண் விழிக்காததால், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம், சண்முகத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சண்முகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

இதை அடுத்து சண்முகத்தின் சகோதரர் அண்ணாதுரை காவல் நிலையத்தில் இளமதி மீது புகார் கொடுத்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் இளமதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.