ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் அரசு பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் அரசு பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருபவர் கூலித் தொழிலாளியின் மகள். 13 வயதான இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாணவி தற்கொலைக்கு முயன்ற காரணத்தை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல் துறை நடத்திய விசாரணையில், 13 வயது மாணவிக்கு அதே அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் 55 வயதான முரளி கிருஷ்ணா என்பவர் சிறுமியிடம் தொடர்ந்து தகாத முறையில் நடந்து வந்ததாகவும், வகுப்பறையில் தனியாக அழைத்து சில்மிஷம் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டு முகவரியை கொடுத்து தனியாக வரும்படி வற்புறுத்தி வந்ததாகவும் இதனால் பயந்து போன மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி செய்வதறியாது நேற்று மாலை வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்த திருவலம் காவல் துறையினர் திருவலம் அடுத்த சீக்கராஜாபுரம் பகுதியை சேர்ந்த 55 வயதான அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் முரளி கிருஷ்ணாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் வேறேதும் மாணவிகளிடத்தில் இது போன்று தகாத முறையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. படிக்கும் செல்லும் இடத்தில் ஆசிரியரே இதுபோன்ற சம்பத்தில் ஈடுபடுவது பெற்றோர் மற்றும் மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.