சேலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கதிர்வேலை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

சேலத்தில் ரவுடிகளை ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ஏராளமான ரவுடிகள், குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில் பல்வேறு வழிப்பறி சம்பவங்கள், உருக்கு வியாபாரி கணேஷன் கொலை வழக்கு,  வன்முறைத் தாக்குதல் வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கதிர்வேல் என்பவரை போலீசார் நீண்ட நாட்களாக தேடி வந்தனர்.

 

இந்நிலையில் அவரை தீவிரமாக தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்த போலீசார் சேலம் காடிப்பட்டி அருகே பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரவுடி கதிர்வேலை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது போலீசாருடன் கதிர்வேல் மோதலில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 

இந்த மோதலின்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டர் தாக்குதலில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில் தற்காப்புக்காக என்கவுண்டர் என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டரில் இருந்து தப்பிய 3 ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.