ஆளும் அதிமுகவைச் சேர்ந்த இளம் வி.ஐ.பி. ஒருவரை ஸ்கெட்ச் போட்டு தூக்க ரவுடி மணிகண்டன் சுற்றி வந்ததை அறிந்துதான், இந்த என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடைபெற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ஆரோவில்லை ஒட்டிய குயிலாப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், தாதா மணிகண்டன். 39 வயதான இவர்மீது ஆரோவில், கோட்டக்குப்பம், திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 கொலை வழக்குகள், வெடிகுண்டு வீசுதல், கொலை மிரட்டல், கொலை மற்றும் கொள்ளை முயற்சி உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது.  

2010-ம் ஆண்டு மணிகண்டனின் தம்பி ஆறுமுகத்தை பூபாலன் தரப்பு கூலிப்படையை ஏவி கொலை செய்தது. இதன் பிறகும் மணிகண்டனின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து, என்கவுன்ட்டர்' லிஸ்ட்டில் அப்போதே மணிகண்டனின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர், தன் காதல் மனைவியின் அறிவுரையின்படி மற்றும் உயிருக்கு பயந்து திருந்தி வாழப்போவதாக 2015-ல் அப்போதைய எஸ்.பி. அமல்ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். 

அதிலிருந்து சரியாக ஒரே வாரத்தில் இவரின் தம்பி ஆறுமுகத்தை முன்விரோதம் காரணமாக, மயிலத்தில் ஓடஓட விரட்டிக் கொடூரமாகக் கொலை செய்தது ராஜ்குமார் தரப்பு. அதன்பிறகு, `புலி வாலைப் பிடித்துவிட்டோம் இனி விட முடியாது' என்று உணர்ந்த மணிகண்டன், மீண்டும் ரவுடியிசத்தைக் கையில் எடுத்தார். புதுச்சேரியில் கடந்த ஆண்டு 2018-ல் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கொலை, ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் போலீசார் தேடிவந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்னை வந்து மணிகண்டன் தனது மனைவி பியூலா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

இதையறிந்து 24-ம் தேதி விழுப்புரத்தில் இருந்துவந்த தனிப்படை போலீஸார், மணிகண்டன் தங்கியிருந்த நான்கு மாடி குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளனர். கீழ்த்தள வீட்டிலிருந்த மணிகண்டன் போலீசாரைக் கண்டதும், தான் வைத்திருந்த பட்டாக்கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் பிரபுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர், உதவி ஆய்வாளர் பிரகாஷ் மணிகண்டனை நோக்கி துப்பாக்கியால் 3 முறை சுட்டார். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்களைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயற்சி செய்ததால், என்கவுன்டர் செய்ய நேரிட்டது என போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து உளவுத்துறை தரப்பில் கூறுகையில் என்கவுன்டர் நடந்தது மாலை 6:15 மணிக்கு. தகவல் 7:00 மணிக்கு மேல்தான் வெளியில் கசிந்தது. விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் சென்னையில் இரவு 10:00 மணிக்குமேல் பேட்டி தருகிறார் என்றால், சம்பவத்திற்கு முன்பே அவர் சென்னையில் இருந்திருக்கவேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் சென்னையில் உள்ள  முக்கிய உயரதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இளம் வி.ஐ.பி. ஒருவரை போட்டுத்தள்ள மணிகண்டன் சுற்றி வந்ததை அறிந்துதான், இந்த என்கவுன்ட்டர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.