திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கொள்ளைசம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் கம்பளி போர்வை விற்பனை செய்வதற்காக வந்து தங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின்பேரில்  பத்துக்கும் மேற்பட்ட போலீசாரை கொண்ட தனிப்படை புதுக்கோட்டைக்கு வந்தது . அவர்கள் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சோதனைக்காக சென்றனர் . 

அங்கு ஒரு அறையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாப்பாடு வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்ற மற்றொரு இளைஞர் அப்ஜுன்ஷேக் என்பவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார் . 

அப்போது தடுமாறி கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் விடுதியில் தங்கியிருந்த 5 இளைஞர்களையும் தனிப்படை போலீசார் திருச்சிக்கு கொண்டுசென்றனர். மேலும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து வருகின்றனர். 

திருச்சியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பே புதுக்கோட்டையில் விடுதியில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களை போலீசார் அழைத்து சென்ற சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.