சென்னையில் மதுபோதையில் சாலையோரம் கிடந்த 2 பேரின் பிறப்பு உறுப்பை அறுத்த சைக்கோ கொலையாளி முனுசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான முனுசாமி, எதற்காக அப்படிச் செய்தேன் என போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். 

கடந்த மாதம் 26-ம் தேதி ரெட்டேரி பாலத்தின் அடியில் இரவில் குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அஸ்லாமின் மனைவி பல்கீஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ``தன் கணவர், நோன்பு கடைப்பிடிப்பதால் மதுகுடிப்பதில்லை. போலீசார் தவறான தகவல்களைச் சொல்கின்றனர்'' என்று புகார் அளித்தார். இதனையடுத்து  ஏ.கே.விஸ்வநாதன் தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

 

இதேபோன்று கடந்த 2-ம் தேதி குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த நாராயணசாமி பிறப்பு உறுப்பும் அறுக்கப்பட்டது. இந்தச் சம்பவமும் அதே பகுதியில் நடைபெற்றதால் போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மர்ம உறுப்புகளை அறுப்பது சைக்கோ கொலையாளி என போலீசார் உறுதிப்படுத்தினர். பின்னர் நாராயணசாமியிடம் போலீஸார் விசாரித்தபோதுதான் சைக்கோ கொலையாளி குறித்து முக்கிய தகவல் தெரியவந்தது. தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்த நபர் ஒருவர், அவ்வழியாகச் செல்பவர்களிடம் பேசும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த நபரின் புகைப்படத்தை நாராயணசாமியிடம் போலீஸார் காண்பித்தபோது அவர் சைக்கோ கொலையாளியை அடையாளம் காட்டினார். அவரது புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.

 

இதனையடுத்து போலீசாருக்கு சைக்கோ கொலையாளி குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் வில்லிவாக்கத்துக்கு விரைந்த போலீசார் அவனை
கைது செய்தனர். அவரின் பெயர் முனுசாமி (35), மானாமதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

இது தொடர்பாக முனுசாமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ``மானாமதுரையில் நான் வசித்தபோதுதான் நண்பர்கள் மூலம் தன் பாலின சேர்க்கை பழக்கத்துக்கு நான் அடிமையானேன். அதன்பிறகு அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. வேலை தேடி சென்னை வந்தேன். மீன் கடையில் வேலை பார்த்தேன். தனிமையில் இருந்த நான், மது அருந்தியதும் தன்பாலின சேர்க்கைக்கு ஆள்தேடுவேன். என்னோடு ஒத்துழைப்பவர்களை ஒன்றும் செய்ய மாட்டேன். ஆனால், ஒத்துழைக்காதவர்களின் பிறப்பு உறுப்பை அறுத்துவிடுவேன்’’ எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.