தூத்துக்குடி அருகே 16 வயது சிறுமி ஒருவருக்கு சமீபத்தில் இறந்த நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. இதனை சிறுமியின் குடும்பத்தினர் யாருக்கும் தெரிவிக்காமல் தங்கள் வீட்டின் பின்புறம் புதைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதியில் பரவ பொதுமக்கள் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அந்த சிறுமியிடமும் அவரது பெற்றோரிடமும் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவர் அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக உள்ளார். டி.வி.மெக்கானிக் தொழிலும் பார்த்து வருகிறார். அவர் பூஜை செய்யும் கோவிலுக்கு வாகைகுளத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நாள்தோறும் வருவார்.

அந்த மாணவியிடம் பூசாரி ராஜு சிரித்து, சிரித்து பேசி பழகியுள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் பூசாரி ராஜு , அந்த மாணவியை கோவிலுக்கு அருகில் உள்ள தனது விட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாதததைப் பயன்படுத்தி மாணவியை பூசாரி ராஜு கற்பழித்துள்ளார். தொடர்ந்து இது போன்று மாணவியை பூசாரி அடிக்கடி வீட்டுக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். ஆனால் அது தெரியாமல் வயிறு வலிப்பதாக கூறி மாணவி மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் மாணவி வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தை இறந்து போனது.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பிறந்தது. குழந்தை இறந்து பிறந்ததால் குடும்பத்தினர் வீட்டின் பின்புறத்தில் குழந்தையின் உடலை புதைத்தது தெரியவந்தது. 

இதையடுத்து பூசாரி ராஜை பிடித்த காவல்துறையினர், இந்த வழக்கில் அவன் தப்பிவிடக்கூடாது என்பதற்காக இந்த கொடுமையான சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.