திருச்செந்தூர் அருகே மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் அருகே இருக்கும் ராணி மகாராஜா புரத்தைச் சேர்ந்தவர் ரேவதி. வயது 16. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வருகின்றனர். இதனிடையே தேரிகுடியிருப்பு பகுதியில் இருக்கும் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோயில் அருகே இருக்கும் வனப்பகுதியில் தனியாக பேசிக்கொண்டிருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை அந்த வழியாக சென்ற பாலமுருகன் என்பவர் பார்த்துள்ளார். இவர் ராணுவத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். உடனே இது குறித்து அவர் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் தனது நண்பரான காவலர் சசிகுமாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து வந்த சசிகுமார் காதல் ஜோடிகளை அவரது செல்போனில் புகைப்படம் எடுத்து ரேவதியின் வீட்டில் காதல் விவகாரத்தை கூறி விடுவதாக மிரட்டியுள்ளார். அவ்வாறு கூறாமல் இருக்க வேண்டுமென்றால் 5 ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். 

அவ்வளவு பெரிய தொகை தங்களிடம் இல்லை என்று ரேவதி மற்றும் கிருஷ்ணன் கூறியுள்ளனர். ஆனால் பணம் கொடுத்தால்தான் காதல் விவகாரத்தை வெளியில் கூறாமல் இருப்பேன் என்று சசிகுமார் மிரட்டியிருக்கிறார். இதையடுத்து பணத்தை திரட்டி கொண்டுவருமாறு கிருஷ்ணனை அந்த இடத்திலிருந்து அனுப்பியிருக்கிறார் சசிகுமார். கிருஷ்ணன் போன பிறகு தனியாக இருந்த ரேவதியை காவலர் சசிகுமார் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் ரேவதி சத்தம்போட்டு அழுதிருக்கிறார்.

அதற்குள்ளாக கிருஷ்ணன் அவருடைய உறவினர் ஒருவருடன் பணத்துடன் அந்த இடத்திற்கு வந்துள்ளார். அந்த பணத்தை வாங்கிய காவலர் சசிகுமார் இருவரையும் அவதூறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் காதல் விவகாரம் இரு வீட்டுக்கும் தெரிய வந்துள்ளது. பின்னர் நடந்த சம்பவம் குறித்து இருவரும் பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் காவலர் சசிகுமார் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.