திருப்பூர் தெற்கு  பகுதியில் தினமும் இருசக்கர வாகனங்கள்  அடிக்கடி திருட்டு போவதாக போலீசில் புகார்கள் தொடர்ந்து வருவதால் , சப்-இன்ஸ் பெக்டர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் இறங்கியது  போலீஸ் படை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு இளம் பெண்ணும், ஒரு வாலிபரும் தனித்தனி மொபட்டில் வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் நாங்கள் கணவன்- மனைவி. பனியன் கம்பெனியில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்கிறோம் என்று கூறினர், சில கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் இருவரையும் தனித்தனியே விசாரணை நடத்தினர். 

போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில் ஓட்டி வந்த ஒரு மொபட் திருட்டு வண்டி என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் PKR காலனியை சேர்ந்த லோகநாதன், கல்லாங்காட்டை சேர்ந்த சுதா ஆகியோர் என்பது தெரியவந்தது. 

இவர்கள் ஒரே வீட்டில் வசிக்கும் கள்ளக் காதல் ஜோடி பகல் நேரங்களில் சந்தேகம் வராதபடி கிடைக்கும் வேலைக்கு செல்பவர்கள். இரவில் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தனித்தனி வண்டிகளில் வீடு திரும்பி விடுவார்கள். பெண்ணுடன் வருவதால் போலீசாருக்கு எப்போதுமே சந்தேகம் வராதபடி பார்த்துக்கொண்டனர்.

தற்போது வாகனங்கள் திருடு போவதால் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்பது தெரியவந்தது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கள்ளக்காத ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.