நான் சொல்ல சொல்ல கேட்கவே இல்ல, அவள் வேறு ஜாதி பொண்ணு, போயும், போயும் அவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான் அதான் வெட்டிக்கொன்றேன் என அண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்பசாமிக்கு வினோத் , கனகராஜ் , கார்த்திக் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவரும் சுமை தூக்கும் தொழிலாளிகள். இதில் கனகராஜ், வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர்களுடைய காதல் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு கனகராஜின் தந்தை கருப்பசாமி மற்றும் சகோதரர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனகராஜ் தனது காதலியை கல்யாணம் செய்துகொண்டு, அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார். இந்த விஷயம் தெரிந்த கனகராஜின் அண்ணன் வினோத் நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் வினோத், கனகராஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு காதலி ஓடி வந்து தடுக்க முயன்றார். இதனால் அந்த இளம்பெண்ணின் தலை மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத வினோத், கனகராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே வினோத் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கனகராஜின் காதலியை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து வினோத்தை  கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வினோத் அளித்துள்ள வாக்குமூலத்தில்; எனது தம்பி கனகராஜ். வேறு ஜாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் பலமுறை கண்டித்தேன். ஆனால் அவன் கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணை திருமணம் செய்வதிலேயே குறியாக இருந்தான். கடந்த சில நாட்களாக கனகராஜ் அந்த பெண்ணுடன் தனியாக வசித்து வந்தால், எனக்கு மேலும் ஆத்திரத்தை  அதிகப்படுத்தியது. இதனால் இருவரையும் கொலை செய்ய நினைத்தேன். சம்பவத்தன்று அவர்களுடைய வீட்டுக்கு சென்ற நான் தம்பி கனகராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தேன், குறுக்கே வந்த வர்ஷினி பிரியாவை சராமாரியாக வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.ஜாதி வெறியால் இப்படி கூட பிறந்த அத்தம்பியை கொடூரமாக செதில் செதிலாக வெட்டி வீசியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.