திருமணத்திற்கு தடையாக இருந்த காதலியை ராணுவ வீரர் கொன்று பிணத்தை நிர்வாணமாக புதைத்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளறடையை அடுத்த பூவார் புத்தன் கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ராக்கி (30). இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஜூன் 21-ம் தேதி வழக்கம்போல வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ராக்கிமோள் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ராக்கிமோள் மாயமான வழக்கில் தற்போது துப்பு துலங்கி உள்ளது. அவரது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்த போது அகில் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும், ராக்கிமோளை அவரது காதலன் கொன்று பிணத்தை தோட்டத்தில் புதைத்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை தொடர்பாக அவர் நண்பர் ஆதர்ஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ராக்கிமோளும் அவரது உறவினரான காட்டாக்கடை அம்புரி பகுதியைச் சேர்ந்த அகில் (27) என்பவரும் காதலித்து வந்தனர். அகில் டெல்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். ராக்கிமோளை அழைத்துக் கொண்டு அகில், பல்வேறு இடங்களுக்கும் உல்லாச பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் திடீரென்று ராக்கிமோளை சந்திப்பதை அகில், தவிர்த்து வந்தார். அவர் போன் செய்தால் கூட அதை அவர் எடுத்து பேசவில்லை .இதனால் அகிலை நேரில் சந்தித்து அதுபற்றி ராக்கிமோள் கேட்டார். அதற்கு அவர் சரியான காரணத்தை கூறாமல் அவரை திருப்பி அனுப்பி விட்டார்.

 

இந்நிலையில் ராக்கிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தெரியவந்ததும் ஆவேசமடைந்த ராக்கி, தன்னை ஏமாற்றிவிட்டதாக அகிலுடன் சண்டையிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அகில் ராக்கியை கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டார். பின்னர், தனது தம்பி ராகுல், அவரின் நண்பர் ஆதர்ஷ் உதவியுடன், வீட்டுக்குப் பின்பக்கம் யாருக்கும் தெரியாமல் நிர்வாணமாக புதைத்தனர். குழிதோண்டியது தெரியாமல் இருக்க அந்த இடத்துக்கு மேலே சில செடிகளை நட்டனர். பின்னர் அகில், தான் பணியமர்த்தப்பட்டிருக்கும் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

போலீசார், புதைக்கப்பட்டிருந்த ராக்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டெல்லியில் இருந்து அகிலை கேரளாவுக்கு கொண்டு வரும் வேலையில் போலீசார் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர்.காதலியை ராணுவ வீரர் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.