மதுரையில் இருக்கும் அழகர் கோவிலுக்கு நண்பரோடு காட்டுப்பகுதி வழியாக சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரையை சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தனது நண்பருடன் அழகர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். மலை மேலே இருக்கும் அழகர் கோவிலுக்கு செல்வதற்கு தார்சாலை மற்றும் ஒத்தையடி பாதை இருக்கிறது. ஒத்தையடிப்பாதை வனப்பகுதி வழியாக செல்வதால் அதை பெரும்பாலானோர் பயன்படுத்த மாட்டார்கள். ஒரு சிலரே அந்த வழியாக சென்று வருவார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ஒத்தையடிப் பாதை வழியாக சிறுமியும் அவரது நண்பரும் நடந்து சென்று இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு தெரியாமல் மர்மநபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். திடீரென அவர்களை மறித்த அந்த நபர் கையில் கத்தியை காட்டி இருவரையும் மிரட்டியிருக்கிறார். இதனால் அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். யாரும் இல்லாத சூழலை பயன்படுத்தி அந்த மர்ம நபர் இருவரிடமிருந்தும் செல்போன் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார்.

பின்னர் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கிய மர்ம நபர் சிறுமியை காட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர். உடனடியாக அவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அழகர்கோவில் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த அந்த மர்ம நபரை அதிரடியாக காவலர்கள் கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மேலூரை சேர்ந்த தர்ஷன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் அதிகமான வழிப்பறி சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதே போன்று பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்ததாக கூறப்படுகிறது. வெளியே சொன்னால் பிரச்சனையாகிவிடும் என்பதால் பெரும்பாலான காதல் ஜோடிகள் இதுகுறித்து புகார் தெரிவிப்பதில்லை. அதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் தனியாக வரும் காதலர்களை குறிவைத்து கொள்ளை சம்பவம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.