சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் சாய் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து எத்திராஜ் வயதான தனது தாய் சரஸ்வதியுடன் (70) தனியாக வசித்து வருகிறார்.

வயது மூப்பு காரணமாக சரஸ்வதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. மனைவியும் பிரிந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக இந்த சம்பவங்களால் எத்திராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்ய அவர் முடிவெடுத்திருக்கிறார். 

அதன்படி சரஸ்வதியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த எத்திராஜ், அதே கத்தியை வைத்து தனது வயிற்று பகுதியில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த நேரத்தில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் சரஸ்வதி பிணமாக கிடந்துள்ளார். அருகே எத்திராஜ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் சரஸ்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எத்திராஜ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கொலை மற்றும் தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயதான தாயை கழுத்தை அறுத்து கொலை செய்து, தற்கொலைக்கு முயன்ற மகனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.