திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி கொடூரக் கொலை! 4 ஆண்டு லிவ் இன் வாழ்க்கையில் நேர்ந்த துயரம்!
ஏப்ரல் 12ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தபோதுதான் இந்தக் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
டெல்லியில் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியை கொன்று உடலை 12 கிலோமீட்டர் தொலைவில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வடக்கு டெல்லியில் உள்ள காரவால் நகரில் கிருஷ்ணா பப்ளிக் பள்ளி அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தபோதுதான் இந்தக் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கொல்லப்பட்டவர் உத்தரகாண்ட் மாநிலம் மிராஜ்பூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரோஹினா நாஸ் என்கிற மஹி என்பது தெரியவந்தது.
கொலைக் குற்றவாளி வினீத் தலைமறைவாக இருப்பதாகவும், கொலைக்குத் திட்டமிட்டு உடலை மறைக்க உதவியதற்காக அவரது சகோதரி பாருல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஒருவரை ஒருவர் காதலித்து வந்த ரோஹினாவும், வினீத்தும் நான்கு ஆண்டுகளுக்கு முன் டெல்லிக்கு ஓடிப்போனதாவும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூங்கிக் கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அந்தப் பெண் மஹி 'லிவ் இன்' வாழ்க்கையை முடித்துக்கொண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று வினீத்திடம் கூறி இருக்கிறார். அதற்கு வினித் சம்மதிக்கவில்லை என்பதால் மஹி தொடர்ந்து வினீத்தை திருமணத்துக்காக வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த வினீத் தன்னுடன் ஒன்றாக வாழ்ந்துவந்த காதலியை கொலை செய்துவிட்டார் என போலீசார் மூலம் தெரிகிறது.
இதுபற்றி வடகிழக்கு டெல்லி துணை கமிஷனர் ஜாய் டிர்கி கூறுகையில், "இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறார்கள். வினீத் தன் சகோதரி பரூல் உதவியுடன் அந்தப் பெண்ணைக் கொல்ல முடிவு செய்திருக்கிறார்" என்று சொல்கிறார். ஏப்ரல் 12 அன்று, வினீத் மற்றும் மஹி இடையே மீண்டும் திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீனித்தும் அவர் சகோதரி பரூலும் மஹியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டனர்.
கொன்ற பிறகு வினீத், மற்றொரு நபரை அழைத்துள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்திருக்கிறார். வினீத் அந்தப் பெண்ணின் சடலத்தை தோளில் சுமந்து எடுத்துச் சென்று 12 கி.மீட்டருக்கு தொலைவில் உள்ள கிருஷ்ணா பப்ளிக் ஸ்கூல் அருகே வீசியுள்ளனர்.
வினீத்தும் அவரது கூட்டாளியும் தலைமறைவாகிவிட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் க்ரோஷ்னா நகரில் இருந்து பரூலை கைது செய்துவிட்டனர். கொல்லப்பட்ட பெண் மஹி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வினீத்தின் குடும்பத்தினர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேடப்படும் குற்றவாளி வினீத் மீது ஏற்கெனவே கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2017ஆம் ஆண்டு வினீத்தும் அவரது தந்தையும் பாக்பத்தில் உள்ள ரமலா சர்க்கரை ஆலையில் நடந்த கொலையில் தொடர்பு கொண்டவர்கள். அந்த வழக்கில் தந்தை-மகன் இருவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு அக்டோபர் 25, 2019 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வினீத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மஹி டெல்லியில் பரூலுடன் வசித்து வந்திருக்கிறார். வினீத் நவம்பர் 26, 2022 அன்று ஜாமீனில் வெளியே வந்ததும் இருவரும் மீண்டும் ஒன்றாக வசிக்கத் தொடங்கியுள்ளனர்.