நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கொமதேக இளைஞரணி அமைப்பாளர் கவுதம் (35). இவரது மனைவி திவ்யபாரதி(29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கவுதம் வெப்படையில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். 

காரில் கடத்தப்பட்ட கொ.ம.தே.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஏரியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கொமதேக இளைஞரணி அமைப்பாளர் கவுதம் (35). இவரது மனைவி திவ்யபாரதி(29). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கவுதம் வெப்படையில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது அலுவலகத்தில் குணசேகரன் (29), பிரகாஷ் (28) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் 2 பேரும் அடிக்கடி வசூல் பணத்தை கையாடல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கவுதம் கண்டித்துள்ளார். மேலும் தீபன் (29) என்பவரும் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்ததோடு, கவுதமிடம் பணம் கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்காமல் கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து நின்று விட்டதாக தெரிகிறது.

இந்நடிலையில் கடந்த 21ம் தேதி இரவு பைனான்ஸ் நிறுவனத்தை பூட்டி விட்டு, வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். பாதரை மாரியம்மன் கோயில் அருகே ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்து காரில் கடத்திச் சென்றது. அடுத்த சில நிமிடங்களில், கவுதம் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, நகை, பணத்தை எடுத்து பையில் போட்டு வைக்கும்படியும், தான் அனுப்பும் நபரிடம் கொடுத்துப்பும்படியும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக மனைவி திவ்யாபாராதி அளித்த புகாரின் பேரில் வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், சங்ககிரி வடுகபட்டி ரயில்வே தண்டவாளம் அருகே, மேட்டுக்காடு ஏரிக்கரை முட்புதர்களுக்குள் ஆண் சடலம் கிடப்பதாக வெப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டனர். விசாரணையில், அது கடத்தப்பட்ட பைனான்சியர் கவுதம் என்பதும், அவரது நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தி, பின்னந்தலையில் வெட்டியுள்ளனர். மேலும், உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், கவுதமை கொலை செய்த 3 பேர், திருச்சியில் போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்கள், கவுதம் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த குணசேகரன், பிரகாஷ் மற்றும் தீபன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மேலும் 5 பேருடன் சேர்ந்து, கவுதமை கடத்திச்சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளது.