கேரளாவில் நடுரோட்டில் பெண் போலீஸை போக்குவரத்து போலீஸ்காரர் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள காஞ்ஞிப்புழா பகுதியைச் சேர்ந்தவர் சவுமியா புஷ்பாகரன் (33). வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி புரிந்து வந்தார். இவரது கணவர் சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. போலீஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் இவர்களது வீடு உள்ளது. 

இந்நிலையில் நேற்று பகல் 2.30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற சவுமியா, பின்னர் பொருட்கள் வாங்க 3.30 மணிக்கு ஸ்கூட்டரில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் சவுமியாவின் ஸ்கூட்டர் மீது மோதினார். 

இதில் சவுமியா தடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய வாலிபர் கத்தியால் சவுமியாவை சரமாரியாக பல்வேறு இடங்களில் குத்தினார். பலத்த ரத்த காயங்களுடன் பெண் காவலர் சவுமியா தப்பிக்க முற்பட்ட போது திடீரென்று பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்தினார். இதில் உடல் கருகிய அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரை விரட்டிவந்து தீயிட்டு கொளுத்திய நபரும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அஜாஸை போலீசார் கைது செய்தனர். பின்னர் சவுமியா உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அஜாசிற்கும் சவுமியாவிற்கும் நெருக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் சவுமியாவை அஜாஸ் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.