ஆத்திரம் அடைந்த சத்யாவின் குடும்பத்தினர் திடீரென வழக்கறிஞர் வெங்கடேசனை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்யா அவர்களை தடுக்க முயன்ற அவருக்கும் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவள்ளூரை அடுத்த வெள்ளரி தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (37). வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த சத்யா (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சத்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து கண்டித்தனர். ஆனால் சத்யா, வெங்கடேசனுடன் கள்ளக்காதல் தொடர்ந்தது. 

இந்நிலையில், நேற்று இரவு காக்களூர் ஆஞ்சநேயபுரத்தில் உள்ள சத்யாவின் வீட்டிற்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது தந்தை சங்கர், தாய் செல்லம்மாள், தம்பி வினோத் மற்றும் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அப்போது வீட்டில் வழக்கறிஞர் வெங்கடேசனும் இருந்தார். பேச்சுவார்த்தை நடத்துகொண்டு இருந்த போது தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த சத்யாவின் குடும்பத்தினர் திடீரென வழக்கறிஞர் வெங்கடேசனை சரமாரியாக வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்யா அவர்களை தடுக்க முயன்ற அவருக்கும் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மற்றொரு புறம் சத்யா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதனிடையே, இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்தனர். உடனே அங்கிருந்த சத்யாவின் குடும்பத்தினர் வீட்டின் கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். உடனே சம்பவ தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இருவரும் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சத்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக சத்யாவின் குடும்பத்தினர் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.