சேலத்தில் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றதால் விரக்தி அடைந்த பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் நாராயண நகர் குறிஞ்சி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் வைத்தீஸ்வரன் இவர் அந்த ஏரியாவில் பிரபல ரவுடி. இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது. நகரில் பிரபல ரவுடி யான வைத்தீஸ்வரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் மது போதையில் வரும் அவர், குறிஞ்சி நகரில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் வைத்தீஸ்வரனுடைய மனைவி அவரை, பலமுறை கண்டித்துள்ளார். 

ஆனாலும் வைத்தீஸ்வரன் குடித்துவிட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சில நாள்களுக்கு முன்பு, தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சசிகலா அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

இந்நிலையில் வைத்தீஸ்வரன் மனைவி சசிகலாவிடம் குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும், அவர் வரவில்லை. 

இதனால் விரக்தி அடைந்த வைத்தீஸ்வரன், வெள்ளிக்கிழமையன்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.