விழுப்புரம் அருகே காதலன் கண் முன்பே காதலி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரும், சூரமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நல்லூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். 

இந்நிலையில், காதலர் இருவரும் நேற்று முன்தினம் இரவு வயல் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, சற்று தொலைவில் மது குடித்துக்கொண்டிருந்த, பள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர், காதல் ஜோடி தனிமையில் இருப்பதைப் பார்த்து, அவர்களை சுற்றி வளைத்தது. அவர்களில் 3 பேர் காதலனை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து காதலனின் கண் முன்பே அந்த பெண்ணை வாலிபர்கள் 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். 

பின்னர், காதலன் மொபைல் போன் மூலம் தனது நண்பரை வரவழைத்து, பலாத்காரம் செய்தவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இருவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கி, விரட்டினர். அதன் பின்னர் அந்த கும்பலும் அங்கிருந்து ஓடி விட்டது. இதனையடுத்து, இளம்பெண், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.