பீகாரில் வாய் பேச முடியாத சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் சிறுமி தங்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக, கண்களை கூரிய ஆயுதத்தால் குத்தி சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், மதுபானி மாவட்டத்தில் உள்ள கவ்வாஹா பார்கி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் சிறுமி மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து தனது வீட்டில் இருந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு அழைத்து சென்றாா். அப்போது 3 பேர் கும்பல் சிறுமியை கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு  தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். 

பின்னர் அந்த காம கொடூரர்கள், சிறுமி தங்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக அவரது கண்களை கூர்மையான ஆயுதத்தால் குத்தி சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக உடன் இருந்த சிறுவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிறுமியின் பெற்றோர் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.