கோவையில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முத்தூட் மினி பைனான்ஸ் பெண் ஊழியர் ரேணுகாதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுரேஷ் ஆகியோர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஏராளமானோர் நகைகளை அடமானம் வைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை என்பதால், இரண்டு பெண்கள் மற்றும் பணியில் இருந்துள்ளனர். திடீரென உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர் 2 பெண்களை தாக்கி சுமார் 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

 


இதுதொடர்பாக உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நிதிநிறுவன ஊழியர்களான போத்தனூரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி(26), கெம்பட்டி காலனியை சேர்ந்த திவ்யா(24) ஆகியோரிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர்.

ரேணுகா தேவி இந்த கிளையிலேயே பணியாற்றி வந்துள்ளார். ரூ.2 கோடி நகைகள் இந்த கிளையில் இருப்பது வெளியாட்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் இந்நிறுவன ஊழியர்கள் தொடர்பு இல்லாமல் இந்த கொள்ளை நடக்க வாய்ப்பு இல்லை என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து பணியில் இருந்த ரேணுகா தேவி, திவ்யா ஆகியோரது செல்போன் அழைப்புகள் பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரேணுகா என்ற பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் நானும் ரேணுகா தேவியும் சேர்ந்து தான் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினோம் என தெரிவித்தார்.  

தற்போது சுரேஷிடம் இருந்த 812 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் கொள்யை சம்பவத்தில் வேறுயாருக்காவது தொடர்பு உள்ளதாக என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.