சென்னையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய நபரிடம் நகை மற்றும் பணத்தை இழந்து ஏமாந்துள்ளார். புகாரின் பேரில் விசாரித்தபோது, அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது. 

சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் 33 வயது பெண். இவர் காவலராக பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் செல்போன் நெம்பரை பகிர்ந்து கொண்டு இருவரும் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒருநாள் பெண் காவலரிடம் பேசிய போது உங்களை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். அதன்படி இருவரும் நேரில் சந்தித்தனர். நாளடைவில் பெண் காவலரிடம் நைசாக பேசி அவருடன் அடிக்கடி உல்லாசாக இருந்துள்ளார். மேலும், அவரிடம் இருந்து நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு பேசுவதை திடீரென வசந்த் தவிர்த்து வந்துள்ளார்.

பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை. அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு நகை, பணத்தை பறித்து சென்று திருமணம் செய்ய மறுத்த வசந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து வசத்துக்கு போன் செய்து போலீசார் வரவழைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வசந்த்தின் உண்மையான பெயர் சிங்காரவேலு (35), சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் என்பதும், ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வசித்து வருவதாகவும் முதல் திருமணத்தை மறைத்து பெண் காவலரிடம் பழகி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்து நகை மற்றும் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிங்காரவேலனை கைது செய்து கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.