கடந்த 4-ம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்றேன். வலி அதிகமாகவே சுயமாக பிரசவம் பார்த்தேன். அதில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையை வீட்டுக்கு தூக்கி சென்றால் அவமானம் ஏற்படும் என்பதால் குழந்தையை நவீன கழிவறையில் பிளஸ் டேங்கில் உயிருடன் போட்டு விட்டு வெளியே வந்து விட்டேன். இதில் சிறிது நேரத்தில் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்தது.

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கழிவறையில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அக்குழந்தையின் தாய் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எப்போதும் பரபரப்பாக காணப்படும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது. இதன் அருகில் நோயாளிகள் பயன்பாட்டுக்காக ஒரு நவீன கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.இந்த கழிவறை தொட்டியில் நேற்று முன்தினம் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை தண்ணீரில் பிணமாக கிடந்தது. தகவல் அறிந்த மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த தேதியில் இருந்து கழிவறை பகுதிக்குள் சென்றது யார்? என்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு இளம்பெண் கழிவறைக்கு சென்று 1 மணி நேரம் கழித்து வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து அந்த பெண் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் பிரியதர்ஷினி (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிரியதர்ஷினியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இன்னும் எனக்கு திருமணமாகவில்லை. நான் திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டதால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதனையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி வேறு நோய் உள்ளதாக கூறி உள்நோயாளியாக சேர்ந்தேன். 

எனக்கு பிரசவ வலி அதிகமானதால் 4-ம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்றேன். வலி அதிகமாகவே சுயமாக பிரசவம் பார்த்தேன். அதில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையை வீட்டுக்கு தூக்கி சென்றால் அவமானம் ஏற்படும் என்பதால் குழந்தையை நவீன கழிவறையில் பிளஸ் டேங்கில் உயிருடன் போட்டு விட்டு வெளியே வந்து விட்டேன். இதில் சிறிது நேரத்தில் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்தது என தெரிவித்துள்ளார்.