ஈரோட்டில் தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி கமலா, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டதும், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை.
ஈரோடு பெரியசேமூர் எல்.வி.ஆர்.காலனியில் வசித்து வருபவர் கமலா (60 ). இவருக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் ஆகி கணவர் இறந்து விட்ட நிலையில் மூதாட்டி கமலா தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் சேனாதிபதி புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மகன் சேனாதிபதி தினமும் தாயிடம் செல்போன் மூலம் நலம் விசாரிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தனது தாயார் கமலாவிற்கு போன் செய்த போது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. நீண்ட நேரம் ஆகியும் எடுக்காத காரணத்தால் மகன் சேனாதிபதி அருகில் இருப்பவர்களிடம் பார்க்குமாறு கூறியுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த மூதாட்டி கமலா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி கமலாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கலி கொள்ளை போனதும் நகைக்காக கொலை நடந்து இருந்து இருக்கலாம் என்றும் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கக்கூடிய மதுரையை சேர்ந்த ராமர் என்பவரை தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் தனியாக இருக்கும் வயதானவர்களை குறி வைத்து நகை மற்றும் பணத்திற்காக நடைபெறும் கொலை சம்பவங்கள் பொது மக்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


