புளியங்குடி அருகே பொறியியல் மாணவர் ஒருவர் ஒருதலைக்காதலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே அருகே இருக்கும் திருவேட்டநல்லூரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் திருப்பதி(20). இவர் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு விடுதியில் தங்கியிருந்து சென்று வருவார் என்று தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனிடையே திருப்பதி, ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அந்த பெண் இவரது காதலை ஏற்கவில்லை என்று தெரிகிறது. தனது காதலை பலமுறை அந்த பெண்ணிடம் தெரிவித்தும் அவர் சம்மதம் தெரிவிக்காததால் மனவேதனையில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் ரேகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மேலும் மனஉளைச்சல் அடைந்த திருப்பதி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருப்பதி தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்த அவரது பெற்றோர் கதறி துடித்திருக்கின்றனர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்தனர். பிணமாக கிடந்த திருப்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை திருப்பதியின் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருதலைக்காதலால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.