போலி காசோலைகளைக் கொடுத்து வங்கியில் ரூ.5 கோடியை அபேஸ் செய்த இன்ஜினியர்!
5.2 கோடி ரூபாய் பணத்தை ஷெல் நிறுவனங்களின் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். அந்தக் கணக்குகளை ஆய்வு செய்ததில், ரூ.1.52 கோடி ரூபாய் ரொக்கமாக எடுக்கப்பட்டது தெரிந்தது.
போலி காசோலைகளை தயாரித்து வங்கியில் கொடுத்து ரூ.5.20 கோடி சுருட்டிய 56 வயதான சிவில் இன்ஜினியர் ஷரத் நாக்ரே கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடியில் ரூ.1.52 கோடி ரொக்கமாக எடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகை ஷெல் நிறுவனங்களின் வெவ்வேறு கணக்குகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சன்சாத் மார்க்கில் உள்ள வங்கியில் தனியார் பல்கலைக்கழகத்தின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து புகார் அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2019 இல், பல்கலைக்கழகத்தில் இருந்து வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று காசோலைகள் வங்கியில் வழங்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
குஜராத்தின் வதோதரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வெவ்வேறு கணக்குகளுக்கு பல்கலைக்கழக கணக்கில் இருந்து ரூ.5.20 கோடி மாற்றப்பட்டது.பின், மூன்றாவது காசோலையை வங்கியில் கொடுத்தபோது, பரிவர்த்தனை நிறுத்தப்பட்டது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் உள்ள ஐந்து போலி நிறுவனங்களின் கணக்கிற்கு இந்தத் தொகை மாற்றப்பட்டது. பின்னர் அதிலிருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. விசாரணையில், குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள என்எஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கணக்கில் ரூ.2.5 கோடியும், மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள என்ஜிஓ கணக்கில் ரூ.2.7 கோடியும் வரவு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரி விக்ரம் போர்வால் கூறுகிறார்.
மேலும், அரசு சாரா அமைப்பின் கணக்கில் இருந்து ரூ.2.07 கோடி மீண்டும் என்எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் ஷரத் நாக்ரேவின் மனைவி சங்கீதா நாக்ரே பெயரில் பதிவு செய்யப்பட்டவை.
வங்கிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளில் கூறப்படும் ஐந்து நிறுவனங்கள் பற்றி விசாரித்தபோது அவை ஷெல் நிறுவனங்கள் என்று தெரிந்தது. இந்த ஐந்து நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்ததில், ரூ.1.52 கோடி ரூபாய் ரொக்கமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார். ஷெல் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை ஏற்கனவே கைது செய்யப்பட்ட அமித் அகர்வால் மற்றும் அசோக் ஆகியோர் வழங்கியதாக ஷரத் நாக்ரே வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விண்வெளியில் 20 நிமிடத்திற்கு ஒரு முறை மின்னி மறையும் மர்ம ஒளி! அதிசயிக்கும் விஞ்ஞானிகள்!!