தெரு நாய் ஒன்று வெறிப்பிடித்து  கண்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடிக்க ஆரம்பித்தால் என்னவகும்..? அப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. 

அதிகாலை 5 மணிக்கு சேலம் கிச்சிபாளையத்தில் 75 வயது முதியவரை கடித்த கருப்பு நிற வெறி நாய் ஒன்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்து குதறி இருக்கின்றது.  அதனை விரட்டியவர்களையும் விட்டு வைக்கவில்லை, கல் வீச்சு வைத்தியமும் பலிக்கவில்லை, கட்டை கவனிப்பும் பலனளிக்கவில்லை கலராம்பட்டி, காந்திமகான் தெரு, என அந்த நாய் ஓடிய இடமெல்லாம் மக்களை வெறி கொண்டு கடித்து குதறியது.

இந்த தகவல் அறிந்து பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர். இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை பிடிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு நாய்க்கடி தடுப்பூசி கையிருப்பு இருந்ததால் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து வந்தவர்களுக்கும் ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 63 பேரை அந்த வெறி நாய் கடித்து குதறி இருந்தது.இதற்கிடையே பிடிக்க சென்றவர்களையும் கடிக்க பாய்ந்த நிலையில் இறுதியில் அந்த நாய் ஊர் மக்களால் அடித்து கொல்லப்பட்டது.