லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன் பாஜகவை சேர்ந்தவர் என போலி தகவல் பரப்பியதாக திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா மீது பாஜக செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் புகார் அளித்துள்ளார்.

 

அந்த மனுவில், ‘’மன்னார்குடி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா  திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபர் பாஜகவை சேர்ந்தவன் என்ற தவறான தகவலை தன் ட்விட்டரில் பதிவிட்டார். பாஜக மீது அவதூறு பேசி, பாஜக தான் இதை செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைந்தார். பொது வெளியில் இந்த மோசடியை பரப்பி பதட்டத்தை உருவாக்க முயற்சி செய்தார். இதனையடுத்து காவல் துறை விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கும் முயற்சியோ என்ற அடிப்படையில் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். 

இது குறித்து முகநூல் மற்றும் இதர சமூக ஊடகங்களில் உரிய ஆவாங்களோடு பதிவிட்டிருந்தேன். இந்த நிலையில், டி.ஆர்.பி.ராஜா தன் பதிவை நீக்கியுள்ளார்.  தன் தவறை உணர்ந்து இதை நீக்கியிருந்தாலும், தெரிந்தே தான் இந்த தவறை செய்திருக்கிறார். உள்நோக்கத்தோடு இந்த பதிவை அவர் செய்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. பதிவை நீக்கிய காரணத்தால் அவர் செய்த குற்றத்தை மறைக்க முடியாது. 

காவல் துறை அவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது குறித்து ஆவண செய்வதாக காவல் துறை உயரதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். வழக்கம் போல், இந்த புகாரையும் கிடப்பில் போட மாட்டார்கள் என எண்ணுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக தன் பொறுப்பை உணராமல், ஆணவப்போக்கோடு அவர் செய்திருந்த பதிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தண்டிக்கத்தக்கது. உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே இனி வருங்காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையிலிருந்தும், ஒழுக்கத்திலிருந்தும் தவறாமல் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வழிவகுக்கும்.

ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் மகன், தி மு கவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு செய்திருப்பது நியாயமா என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்ப வேண்டியது அவசியம். தவறான செய்தியை பதிவிட்டு பதட்டத்தை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது தி மு க நடவடிக்கை எடுக்குமா என்பதை ஊடகங்கள் கேட்குமா?’’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.