கள்ளக்காதலியைக் கொலை செய்து விட்டு, தற்கொலை நாடகம் நடத்த முயன்ற, கள்ளக் காதலனை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில், பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் மோகனா என்பதும், ரயில்வேயில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கருத்து வேறுபாடு காரணமாக மோகனா தனது கணவருடன் விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே கடலூரைச் சேர்ந்த வீராசாமி என்பவருடன் மோகானாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்குள் தகாத உறவு வைத்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வீராசாமியும், மோகனாவும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், பெரியமேட்டில் விடுதி எடுத்து மோகானாவும், வீராசாமியும் தங்கியுள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த வீராசாமி, தான் கட்டியிருந்த வேட்டியால் மோகானாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க, மோகனாவின் புடவையை பயன்படுத்தி, தூக்கில் தொங்கவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.இவையனைத்தும் விசாரணையில் தெரியவர, போலீசார் வழக்குப் பதிவு செய்து வீராசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் அருகே வீராசாமி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே திருவொற்றியூருக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த வீராசாமியை அதிரடியாக கைது செய்தனர்.