சென்னையில் பயங்கரம்.. அதிமுக பகுதி செயலாளரை விரட்டி விரட்டி கொலை செய்த மர்ம கும்பல்.. இதுதான் காரணமா?
கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த நபர்களை தட்டிக்கேட்டதால் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் கொலைசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிமுக நிர்வாகி கொலை
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதிமுகவின் பெரம்பூர் பகுதி செயலாளராக இருந்து வந்தார். பெரம்பூர் கக்கன்ஜி காலணி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 8 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இளங்கோவனை வழிமறித்துள்ளது. இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய இளங்கோவனை அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்திற்குள் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. இதில் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செம்பியம் போலீசார் விரைந்து இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஸ்டான்லி மருத்துவமனையில் கூடினர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்த பின் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கஞ்சா போதையில் தனது வீட்டின் அருகே சுற்றித்திரிந்த நபர்களை அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சஞ்சய்,கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஒரு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படியுங்கள்
அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கி சூடு.. குழந்தைகள் உட்பட 6 பேர் பலி - பெண்ணை சுட்டுக்கொன்ற காவல்துறை