சென்னையில் மிக்சி விற்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வாயை பொத்தி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை  சேர்ந்த கோபி - ரம்யா (30) தம்பதி வியாசர்பாடியில் வசித்து வருகின்றனர். கோபி, பாரிமுனையில்  மின்விளக்கு கடை வைத்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம்  மாலை ரம்யா வீட்டில் தனியாக இருந்தபோது, தெருத்தெருவாக மிக்சி விற்ற ஒருவர், இவரது வீட்டிற்கு சென்று, மிக்சி வேண்டுமா என கேட்டுள்ளார். 

அதற்கு ரம்யா, வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது, வீட்டில் வேறு யாரும் இல்லாததை உறுதிப்படுத்திய அந்த நபர், திடீரென ரம்யாவை வீட்டிற்குள்  தள்ளி, வாயை பொத்தி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன்  என மிரட்டியுள்ளார்.

மேலும், நாளை மதியம் மீண்டும் வருவேன். நீ ரெடியாக இருக்க வேண்டும், என கூறி சென்றுள்ளார். இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் மனைவி நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். உடனே கோபி, அக்கம் பக்கத்தினரிடம் இதுகுறித்து  கூறினார். அவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடிக்க திட்டமிட்டார்.  சொன்னபடியே மறுநாள் மதியம் 2 மணி அளவில் அந்த நபர் மீண்டும் ரம்யா  வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து, வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  போலீசார் நடத்திய விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (20) என்பதும், கிண்டியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தெருத்தெருவாக மிக்சி விற்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.