மடிப்பாக்கம் செல்வம் கொலையில் திடீர் திருப்பம்.. வெளியான பகீர் தகவல்.. திமுக பிரமுகர் அதிரடி கைது..!
கைதானவர்களை விசாரித்த போது தான் இது எதிரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பழிதீர்த்துக்கொண்ட சம்பவம் என்பது உறுதியானது. மடிப்பாக்கம் 188வது வார்டில் திமுக வட்ட துணைசெயலாளராக உள்ளவர் குட்டி என்கிற உமாமகேஸ்வரன்(43). இவருக்கு திமுக வட்ட செயலாளராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
கட்சி பதவி மற்றும் ரியல் எஸ்டேட் என இரண்டு தரப்பில் இருந்த எதிரிகள் ஒன்று சேர்ந்து திமுக நிர்வாகியான மடிப்பாக்கம் செல்வத்தை திட்டம் தீட்டி கொன்றது அம்பலமாகியுள்ளது. இதுவரை 13 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக வட்ட செயலாளர் கொலை
சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில் பிப்ரவரி 1ம் தேதி திமுகவின் 188வது வட்ட செயலாளராக உள்ள மடிப்பாக்கம் செல்வம் என்பவரை கூலிப்படை கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கூலிப்படை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூலிப்படையினர் கைது
அதேபோல் மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் கூலிப்படைக்கு தலைவராக செயல்பட்ட வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் என்பவர் கொல்லச் சொன்னதால்தான் தங்கள் கொன்றோம் என அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனால் போலீசார் முருகேசன் தீவிரமாக தேடி வந்தனர். அம்பத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த முருகேசனை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து முருகேசனிடம் விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. முருகேசன் அளித்த வாக்குமூலத்தில், அதாவது மடிப்பாக்கம் குபேரன் நகர் பகுதியில் யாருக்கு சொந்தமானது என தெரியாமல் கேட்பாரற்று 4 கிரவுண்டு இடம் இருந்தது.
பரபரப்பு வாக்குமூலம்
அந்த இடத்தை மதுரை பகுதியில் உள்ள ரவுடி முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோர் கைப்பற்ற முயற்சித்தனர். அப்போது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த திமுக வட்டச்செயலாளர் செல்வம் அதற்கு தடையாக இருந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் தனக்குத் தெரிந்த கட்டுமான நிறுவனத்தின் மூலம் செல்வம் பெயர் பலகை வைத்தார். அப்போது மதுரை முத்து சரவணன் பாபு அண்ணன் ஆகியோர் இந்த இடத்தை நீங்களே விற்றுக் கொள்ளுங்கள், எங்களுக்கு ஆளுக்கு 50 லட்சம் கொடுத்து விடுங்கள் போதும் மீதமுள்ள ஒரு கோடியோ அதற்கு மேல் எவ்வளவு வருகிறதோ அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில்தான் செல்வம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பலகையை அகற்றிவிட்டு புதிய பலகை வைத்தேன். ஆனால் அதற்கு செல்லும் இடைஞ்சலாக இருந்தார்.
இதையும் படிங்க;- திமுக வட்டச்செயலாளர் செல்வம் கொலை வழக்கில் நீளும் மர்மம்.. அடுத்தடுத்து அரங்கேறும் பகீர் சம்பவங்கள்..!
இதனால் இடைஞ்சலாக இருந்த செல்வத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்த சமயத்தில் தேர்தல் அறிவித்தனர். சென்னை மாநகராட்சி 188-வது வட்டத்தில் நடைபெறவிருந்த தேர்தலில் போட்டியிட மடிப்பாக்கம் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க ஏராளமானோர் சால்வை அணிவிப்பதுபோல் சென்றதை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்க சால்வை அணிவிப்பதுபோல் சென்று கொலை செய்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த மற்றொரு முக்கிய குற்றவாளியான கமுதி முத்து சரவணனை அமைந்தகரை பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமுக பிரமுகர் கைது
ஆனால், கைதானவர்களை விசாரித்த போது தான் இது எதிரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பழிதீர்த்துக்கொண்ட சம்பவம் என்பது உறுதியானது. மடிப்பாக்கம் 188வது வார்டில் திமுக வட்ட துணைசெயலாளராக உள்ளவர் குட்டி என்கிற உமாமகேஸ்வரன்(43). இவருக்கு திமுக வட்ட செயலாளராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த செல்வத்தை தீர்த்துக்கட்ட பல நாட்களாக காத்திருந்துள்ளார். இதற்கிடையே, திமுக வட்ட மீனவர் அணி அமைப்பாளரான சகாய டென்ஸி (55), ரியல் எஸ்டேட் புரக்கரும், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் ரவி(எ) ரமேஷ் என்பவருடன் ரியல் எஸ்டேட் தொடர்பாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. அதேபோல், ராம்நகர் பத்திர பதிவு எழுத்தாளரான ஜெயமுருகன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் செல்வத்திற்கு தொடர்பு இருக்கலாம் என அவருக்கு சந்தேகம் இருந்துள்ளது. அவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து செல்வதத்தை தீர்த்துக்கட்ட தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து 40 லட்சம் ரூபாய் பணத்தை கூலிப்படை தலைவன் முருகேசன் மற்றும் முத்து சரவணிடம் கொடுத்து தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளனர். அதேநேரம் செல்வத்தின் நடவடிக்கைகளை எல்லாம் அவருடனே இருந்து பக்கவாக கூலிப்படைக்கு உமாமகேஸ்வரன் அப்டேட் கொடுத்துள்ளார். கொலை முடிந்த பிறகு எதுவுமே நடக்காததது போல உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் குட்டி நின்றுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து வந்த மர்மம் முற்றிலுமாக விலகியுள்ளது.
இதையும் படிங்க;- மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம்.. காரியம் முடிந்ததும் இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம்..!