ஆபாச படம் பார்ப்பவர்கள் உலகவில் இந்தியாவில் தான் அதிகமானோர் இருப்பதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகியது. அதிலும் தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை பலர் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதனையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆபாச படத்தை பரப்புபவர்களை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

முதலில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை இவர் பரப்பியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னையை சேர்ந்த 72 வயதான மோகன் என்னும் முதியவர் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச படத்தை அனுப்பி சிக்கினார். தொடர்ந்து கோவையில் இரண்டு பேர் கைதாகினர். இந்தநிலையில் தற்போது சென்னையில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் சுமித்குமார் கல்ரா(வயது 49). பிரபல தொழிலதிபரான இவர் சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் உடற்பயிற்சி சாதன மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இணையதளம் மூலமாக ஆபாச படங்களை பார்த்து விட்டு அதை தனது நண்பருக்கு முகநூல் வழியாக அனுப்பியிருக்கிறார். அதை கண்டறிந்த காவல்துறையினர் அவரை தற்போது கைது செய்துள்ளனர். டெல்லி சென்றிருந்த அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவலர்கள் மடக்கி பிடித்தனர். அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.