திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், சோழமாதேவியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தார். 

தேர்வில் பிட் அடித்த மாணவன் :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது பள்ளியில் ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் கலைச்செல்வன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த ஆசிரியர், மன்னித்து மீண்டும் தேர்வெழுத அனுமதித்துள்ளார். அப்போது கலைச்செல்வன் இரண்டாவது முறையாக மீண்டும் பிட் அடித்துள்ளார். இதை பார்த்த ஆசிரியர், கலைச்செல்வனை உடனடியாக தலைமையாசிரியரிடம் அனுப்பியுள்ளார். 

அப்போது தலைமையசிரியர் மாணவனின் பெற்றோரை அழைத்து வர அறிவுறுத்தியுள்ளார். அதில் மனமுடைந்த மாணவன் பள்ளி முடித்து அனைவரும் வெளியேறிய பின் வகுப்பறையின் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதையடுத்து விழுந்த சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடிவந்து பார்த்தபோது மாணவன் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்துள்ளார். 

மாணவன் பலி :

இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மாணவனை உடனடியாக உடுமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மாணவன் கலைச்செல்வன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ்குமார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பழனிச்சாமி ஆகியோர் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கலைச்செல்வனுடன் தேர்வெழுதிய சக மாணவர்கள் அவரவர் பெற்றோருடன் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.