கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில் 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 

இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக்சய் குமார் சிங் கடந்த மாதம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

இந்த மனுவில் உத்தரவை கூடுதல் அமர்வு நீதிபதி சதீஸ் குமார் அரோரா இன்று பிறப்பித்தார்.முன்னதாக நீதிபதி சதீஸ் அரோரா நீதிமன்றத்துக்குள் வந்தவுடன், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் தாய், கண்ணீர் வடித்துக்கொண்டே நிர்பயாவின் தாயாரைச் சந்தித்தார். 

அப்போது அவரிடம் சென்று மண்டியி்ட்டு தனது புடைவைை ஏந்தி” தயது செய்து எனது மகனுக்கு உயிர்பிச்சை வழங்கிடுங்கள்” என்று கண்ணீர் மல்க கேட்டார். இதைக் கேட்டவுடன் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியும் கண்ணீர்விட்டார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கும்கூட ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும்தானே. எப்படி நான் அவளையும், அவளுக்கு நேர்ந்ததையும் மறப்பது. என் மகளுக்கு நீதிகிடைப்பதற்காக நான் 7 ஆண்டுகள் காத்திருந்திருந்தேன்” என்று பேசினார்.


நீதிமன்றத்தில் இரு பெண்களும் கண்ணீர்விட்டு அழுததையடுத்து, நீதிபதி சத்தம் போடாதீர்கள் என்று தீர்ப்பை வாசித்தரா். நிர்பயா கூட்டுப்பலாத்கார கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவி்ட்டார்.

நீதிபதி வழங்கிய உத்தரவைக் கேட்ட குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். 

அடுத்த 14 நாட்களுக்குள் தேவைப்பட்டால் குற்றவாளிகள் சட்டப்பூர்வ நிவாரணத்துக்கு அணுகலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, குற்றவாளிகள் 4 பேரும் திஹார் சிறையில் தனித்தனி அறையில் இனிமேல் அடைக்கப்படுவார்கள். இனிவரும் நாட்களில் 4 பேரும், தங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை மட்டும் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்.

இந்த தீர்ப்புக் குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறுகையில் “என் மகளுக்கு நீதிகிடைத்துவிட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்போது பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும். இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வலுவடைந்துள்ளது” எனத் தெரிவி்த்தார்.