குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தும், பகிர்ந்தும் கொண்டதாக கடந்த வாரம் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அன்போன்ஸ் ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தப்பரபரப்பு அடங்குவதற்குள்மேலும் 30 பேரின் பட்டியல் தயாராக உள்ளதாக ஏடிஜிபி தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் காவலன் ஆப் குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கூடுதல் டி.ஜி.பி ரவி, “காவலன் ஆப் சற்று கடினமாக இருப்பதால் ரெஜிஸ்டர் செய்வதில் பிரச்சினை என்று மக்கள் சொல்லியுள்ளனர். இன்னும் சில தினத்தில் காவலன் ஆப் மிக எளிமையாக இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிய வகையில் காவலன் செயலி மாற்றியமைக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஒரு குற்றமும் நடைபெறாத போதே, ஜீரோ கிரைம் நிலை உருவாகும். சிறார்களின் ஆபாச படங்களை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த 30 நபர்களின் பெயரை சென்னை காவல் துறைக்கு அனுப்பி வைத்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். படிக்கும் மாணவர்கள் ஆபாச படம் பார்க்காதீர்கள். உங்கள் கவனம் சிதறும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வளந்துவரும் தொழில்நுட்ப வசதிகளில்  தீயவைகளுக்கு நாம் இரையாகி வருகிறோம்.

உங்களிடம் தவறாக நடந்துகொள்பவரை அடிக்கவும், உதைக்கவும் உங்களுக்கு சட்டத்தில் உரிமை உண்டு. உங்களை மானபங்கம் யாரேனும் செய்ய வந்தால் அவர்களை நீங்கள் சுட்டு கொன்றாலும் குற்றமாகாது. பெண்கள் மீதும் கை வைப்பதும் போலீஸ் மீது கை வைப்பதும் ஒன்று. அனைத்து பெண்களுக்கும் ஏ.டி.ஜி.பி. ரவி என்ற அண்ணன் இருக்கிறான் என்று சொல்லுங்கள். உங்கள் சகோதரன் காவல்துறை அதிகாரி என உங்களிடம் தவறாக  நடந்து கொள்பவரிடம் சொல்லுங்கள்.

பெண்கள் ஆடை மீது குறை சொல்லுபவன் தவறானவன். ஆடை என்பது அது அவர்கள் சுதந்திரம். தவறாக நடக்க முயன்ற எவனாக இருந்தாலும் அடியுங்கள்... உங்கள் பாதுகாப்பே முக்கியம்” என்றும் அவர் கூறினார். இந்தியாவில் ஆபாச படம்பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் ஆபாச படம் பார்த்ததற்காக இந்திய அளவில் கைதான முதல் நபரும் தமிழகத்தை சேர்ந்தவரே. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் பட்டியல் தயாராக உள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை.