மேட்ரிமோனி தளத்தில் ஐபோன் விற்பனை! பெண்ணிடம் நேக்காக 3 லட்சத்தைச் சுருட்டிய இளைஞர்
மேட்ரிமோனி இணையதளத்தில் பெண்களிடம் பணக்காரர் போல் நடித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதும் அவர்களிடம் இருந்து பணம் பறித்து, சொகுசு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்.
குர்கானில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த 26 வயது இளைஞர், திருமண இணையதளங்களில் பெண்களை ஏமாற்றியதாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைனில் பெண்களின் நம்பிக்கையை பெறுவதற்காக தன்னை செல்வாக்கு மிக்கவராக காட்டிக்கொண்ட இந்த இளைஞர் தன்னிடம் பழகிய பெண்களிடம் ஏதாவது சாக்குப்போக்கு கூறி பணத்தை பெற்று, பின் அவர்களைக் கழற்றிவிட்டுவிடுகிறார் என போலீசார் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விஷால் டெல்லியில் எம்பிஏ முடித்தவர். இவர் மேட்ரிமோனி தளத்தில் தன்னை பணக்கார இளைஞர் போலக் காட்டிக்கொள்கிறார். பெண்களின் நண்பராகி, அவர்களைக் கவர்ந்ததும் மலிவான விலையில் ஐபோன்களை விற்பனை செய்வதாக பணத்தைப் பெற்று ஏமாற்றுகிறார். இப்படி மோசடி செய்து எளிதாக பணம் பார்க்கத் தொடங்கியதும், அந்தப் பணத்தை வைத்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
பெண் விரித்த வலையில் சிக்கிய விமானப்படை அதிகாரி! மோசடி செய்த இருவர் கைது
இந்நிலையில், இவர் மீது குர்கானைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரிடம் இருந்து புகார் வந்தது. அந்தப் பெண்ணின் பெற்றோர் மகளுக்கு திருமண வரன் தேடுவதற்காக ஒரு மேட்ரிமோனியல் தளத்தில் பெண்ணின் புரொஃபைலை உருவாக்கியுள்ளனர். விஷால் ஆண்டுக்கு ரூ.50-70 லட்சம் வருமானம் ஈட்டுவதாக கூறுவதைப் பார்த்து அவரிடம் பேசியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண் விஷாலுடன் பேசியிருக்கிறார். விஷால் குர்கானில் சில வில்லாக்கள் மற்றும் பண்ணை வீடுகளைக் காட்டி அவை தனக்குச் சொந்தமானவை என்று அளந்துவிட்டிருக்கிறார். அப்பாவித்தனமாக அவற்றை நம்பிய அந்தப் பெண்ணின் குடும்பத்தினரின் அவரைச் சந்தித்து சம்பந்தம் பேச முடிவு செய்துவிட்டனர்.
இந்தச் சூழலில் விஷால் தான் மலிவான விலையில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விற்பனை செய்வதாகக் கூறி, அதை வாங்கிக்கொள்ளும்படி அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். விஷாலின் வார்த்தை ஜாலங்களை நம்பிய அந்தப் பெண் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் சேர்த்து ஐபோன் வாங்கித் தரும்படி கேட்டு, ரூ.3,05,799 பணத்தை விஷாலுக்கு அனுப்பியுள்ளார். பல்க்காக பணம் வந்ததும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார் விஷால். தான் ஒரு விபத்தில் சிக்கி ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறிவிட்டு, போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துவிட்டார். விஷாலைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
பின்னர் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். மேட்ரிமோனியல் இணையதளத்தில் இவரிடம் ஒரு பெண்ணைப் பேசவைத்து சோதித்துப் பார்த்த போலீசார் இவர் தனது வழக்கமான பார்முலாவில் பெண்களை ஏமாற்றப் பார்ப்பதைக் உறுதி செய்தனர். அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் விஷால் 2021ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு குர்கானில் ஒரு உணவகத்தைத் தொடங்கியதும், தொழில் வெற்றி அடையாமல் படுத்துவிட்டதால், மேட்ரிமோனி தளங்களில் பெண்களை ஏமாற்ற ஆரம்பித்ததும் தெரியவந்தது. விஷால் சில சமயங்களில் பெண்களைச் சந்திக்கும்போது அவர்களை மயக்குவதற்காக ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் செலவு செய்து சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்ததாவும் போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.
சினிமாவை மிஞ்சும் வகையில் இளம்பெண் கொலை... நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?