பெண் விரித்த வலையில் சிக்கிய விமானப்படை அதிகாரி! மோசடி செய்த இருவர் கைது
ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவது போல நாடகமாடி ஒரு லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்றுள்ளனர்.
விமானப்படையின் ஓய்வுபெற்ற மாஸ்டர் வாரண்ட் அதிகாரியிடம், காப்பீட்டுத் திட்டம் முதிர்ச்சியடைந்ததாகக் கூறி ரூ.99,880 மோசடி செய்த இருவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். பணத்தை இழந்த ஓய்வுபெற்ற விமானப்படை வீரரான மகேஷ் சந்த் கவுர், தற்போது சண்டிகரில் உள்ள எலன்டே மால் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிகிறார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் டெல்லியைச் சேர்ந்த தீபக் சந்திரா (27) மற்றும் பீகாரைச் சேர்ந்த ராஜா குமார் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரிடமும் இருந்து 20 டெபிட் கார்டுகள், 3 மொபைல் போன்கள் மற்றும் 2 மடிக்கணினிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அவர்கள் ஜஸ்ட் டயல் இணையதளத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் விவரங்களைப் பெற்றாதவும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் ஜிஐஎஸ் (குரூப் இன்சூரன்ஸ்) பணம், வருங்கால வைப்பு நிதி ஆகியவை தங்களிடம் இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாவும் விசாரணையின் போது தெரியவந்தது.
4,85,790 ரூபாய்க்கான தனது குரூப் இன்சூரன்ஸ் கோப்பு அழிக்கப்பட்டதாக அடையாளம் தெரியாத பெண்ணிடமிருந்து அழைப்பு வந்ததாக கவுர் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். அதே மொபைல் எண்ணில் இருந்து மீண்டும் அழைத்து இன்சூரன்ஸ் தொகை முழுமையாகக் கிடைக்க வேண்டுமானால் ரூ.24,970 செலுத்துமாறு கோரியுள்ளார். கவுர் இரண்டு முறை ரூ.24,970 வீதம் அந்தப் பெண் கோரிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதேபோல மீண்டும் இரண்டு முறை பணப்பரிவர்த்தனை செய்திருக்கிறார்.
இவ்வாறு மொத்தம் ரூ.99,880 தொகையைச் செலுத்திய பிறகு அதே எண்ணிலிருந்து மற்றொரு அழைப்பு வந்தது. இந்த முறை மேலும் ரூ.63,580 செலுத்துமாறு கேட்டுள்ளனர். தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட கவுர், மறுபடியும் பணம் செலுத்த மறுத்துவிட்டார். அதிலிருந்து அவரை அழைத் மொபைல் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட நிலையிலேயே இருந்தது. இதனால் ரூ.99,880 பணத்தை மோசடிப் பேர்வழிகளிடம் இழந்தது பற்றி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை தீபக் சந்திரா மற்றும் ராஜா குமார் இருவரையும் கைது செய்தது.