கள்ளக்காதலுக்கு இடையூறு இருந்ததால் 6 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய் மற்றும் 3-வது கணவருடன் போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமம் முருகர் கோயில் மலையடிவாரத்தில் 6 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு சிறிய பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டு அதன் மீது பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது. கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது. குழந்தையை யாரோ கடத்தி நரபலி கொடுத்து விட்டதாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து, குழந்தையின் உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

யாரேனும் குழந்தையை கடத்தி புதையலுக்காக நரபலி கொடுத்தார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா வரகூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி(23) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா(23) ஆகியோர் இந்த கொடூர கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் நேற்று காலை கைது செய்து விசாரணை நடத்தினர். 

அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஆற்காடு அடுத்த தாழனூர்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அவரை தாய்மாமனான பஞ்சாட்சரம் ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். திருமணமான 2 மாதத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது ஊரில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். அப்போது, 2-வதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் பாண்டியராஜனுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து குழந்தையுடன் தாழனூர்சத்திரத்துக்கு மஞ்சுளா வந்து தங்கியுள்ளார்.

அதன்பின் தான் வேலை செய்த ஷூ கம்பெனியில் ஏற்கனவே காதலித்து வந்த ராஜாமணி என்பவருடன் மஞ்சுளா மீண்டும் காதலை புதுப்பித்து, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால் குழந்தை இடையூறாக உள்ளதால் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து மலையடிவாரத்தில் சிறிய பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். அதன்மீது பாறாங்கற்களையும் வைத்துள்ளனர். அன்றைய தினமே கோயிலில் ராஜாமணியுடன் 3-வது திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.