கீழ்பென்னாத்தூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி, 2 மகள்களை கடப்பாரையால் தாக்கியதில் 2 மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மனைவி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(38). நெசவு தொழிலாளி இவரது மனைவி தேவிகா(28) இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக நெசவு தொழிலில் சரிவர வருமானம் கிடைக்காததால் முருகனுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லையாம். தேவி அதே பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சென்று வந்தார்.

தனக்கு வருமானம் இல்லாத நிலையில், மனைவியின் வருமானத்தில் வாழ்வதா? என முருகன் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இனி வேலைக்கு செல்லா வேண்டாம் என்று கணவர் முருகன் கூறியுள்ளார். அதையும் மீறி மனைவி வேலைக்கு சென்றுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால், ஆத்திரமடைந்த முருகன் கடப்பாரையால் பெற்ற மகள்களான ஷிவானி, மீனாவின் தலையில் குத்தியுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து, அவரை தடுக்க முயன்ற தேவிகாவின் தலையிலும் கம்பியால் தாக்கி உள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த குழந்தைகள் மற்றும் தேவிகாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இருவரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த தேவிகா மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், முருகன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.