ரஜினியின் ‘தர்பார்’படத்தில் ஒரு ஆச்சர்ய வரவாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 2வது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஆனால் மும்பையில் மழை சீஸன் விரைவில் துவங்க உள்ள நிலையில் படப்பிடிப்பை சண்டிகருக்கு மாற்றலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து மிக சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்கின் தந்தை தர்பார் படக்குழுவினருடன் இணைந்துள்ள செய்தி பரபரப்பாகியுள்ளது. யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ஒரு டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடிகராக அறிமுகமான யோக்ராஜ் பஞ்சாபி படங்களிலும் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ரஜினியுடன் அறிமுகக் காட்சியில் ஒரு முக்கிய சண்டைக் காட்சியில் யோக்ராஜ் சிங் மோதவிருப்பதாகவும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்த ஷெட்யூல் துவங்கும்போது திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. தர்பார் படத்தின் முக்கிய வில்லனாக சுனில் ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்பது அடிசனல் செய்தி.