'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் "ஹீரோ". 'இரும்புத்திரை' புகழ் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

ஹீரோவுக்கு ஹீரோயினாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கிறார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. 'ஹீரோ' படத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கான் வெளியிட்ட 'ஹீரோ' படத்தின் டீசர், ரசிகர்களிடம் அசத்தலான வரவேற்பை பெற்றது. 


இதனைத் தொடர்ந்து, படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான 'மால்டோ கிட்டபுலே' பாடல் வீடியோ, நவம்பர் 6ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, சரியாக மாலை 5 மணிக்கு பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 


யுவனின் துள்ளலான இசையில், ரோகேஷ் எழுதியுள்ள இந்தப் பாடலை, ஷ்யாம் விஸ்வாதன் பாடியுள்ளார். பிரபல நடன இயக்குநர் ராஜுசுந்தரம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். யுவன் - சிவகார்த்திகேயன் காம்பினேஷனில் வந்திருக்கும் 'மால்டோ கிட்டபுலே' பாடல், ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. 

இப்பாடலில் இடம்பெற்றுள்ள 'நீ கரெக்டாக உழைச்சா வரும் வலிமை' போன்ற வரிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எதிர்பார்த்த மாதிரியே 'ஹீரோ' சிங்கிள் ட்ராக்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.