கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், ஏழை எளியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வில்லன் நடிகரான நடிகர் சோனு சூட் நிஜத்தில் ஹீரோவாக ஜொலிக்கிறார். சமூக வலைதளங்களில் உதவி கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கும் உடனடியாக உதவி செய்து வருகிறார். அவரால் பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனது பெயரில் ஒரு போலி ட்விட்டர் பக்கத்தைக் கண்ட சோனு சூட், மோசடி வியாபாரத்தை நிறுத்துமாறு அந்த ஐடியை எச்சரித்துள்ளார். இதுகுறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பதிவில், அப்பாவி மக்களை ஏமாற்றியதற்காக நீங்கள் விரைவில் கைது செய்யப்படுவீர்கள் மை டியர். அதற்கு முன்னதாக உங்கள் மோசடி வணிகத்தை நிறுத்திவிடுங்கள் எனக்கூறியுள்ளார். தனது பெயரில் உள்ள ஒரு போலி ஜிமெயில் ஐடி குறித்த ட்வீட்டையும் அவர் ரீ-ட்வீட் செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று சோனு சூட் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில், இன்று மட்டும், 1,137 மெயில்கள், 19,000 பேஸ்புக் மெசேஜ்கள், 4,812 இன்ஸ்டா மெசேஜ்கள், 6,741 ட்விட்டர் மெசேஜ்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் உதவி கேட்டு மக்கள் அனுப்பியுள்ள மெசேஜ்கள். அனைவருக்கும் பதிலளிப்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது. அதனால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். உங்கள் கோரிக்கைகளை நான் தவறவிட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.