சமகால அரசியல் நையாண்டிகள் படம் முழுக்க இடம்பெற்றுள்ளதால் யோகிபாபுவின் ‘தர்மராஜா’படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் மறைந்த தலைவர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, சோ.ராமசாமி ஆகியோர் தோன்றும் காட்சிகள் தியேட்டரில் கலகலப்பை உண்டாக்குகின்றன.

எமனாக நடித்திருக்கும் யோகிபாபு படம் முழுக்க நிறைந்திருக்கிறார். அவர் அப்பாவித்தனமாகக் கேட்கும் கேள்விகள் எல்லாம் அரசியல் சவுக்கடிகள். தெனாவெட்டாகவே பேசிக்கொண்டிருக்கும் அவர் விவசாயி ஒருவர் வந்ததும் சட்டென பவ்யமாகி மரியாதையுடன் பேசுவது உட்பட நடிப்பில் பல ரசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் யோகிபாபு.

எடுத்தவுடனே சொர்க்கத்தில் இருக்கும் கலைஞருக்கு ஜெயலலிதா வணக்கம் சொல்கிறார்.எமலோகமே அழிந்துவிடும் என்கிற சிக்கலான நேரத்தில் பெரியார் அம்பேத்கர் சுபாஷ்சந்திரபோஸ் காந்தி ஆகியோரை அழைத்து தீர்வு கேட்பது, எம்.எஸ்.விஸ்வநாதன் வாலி, டி.எம்.செளந்தர்ராஜன் ஆகியோரை அழைத்து பாட்டுப்பாட வைப்பது, அன்னை தெரசாவை அழைத்து பாதுகாப்பற்ற குழந்தைகளை ஒப்படைப்பது என்று இஷ்டத்துக்கு விளையாடியிருக்கிறார்கள்.மறைந்த சோராமசாமி எப்படி அரசியல் ஆலோசகராகத் திகழ்ந்தார்? என்பதற்கு இப்படம் சொல்லும் விளக்கம் பயங்கரமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி வில்லனாக வருகிற குமரதாசன் வேடம், பாமக தலைவரைக் குறிப்பது போல் அமைந்திருக்கிறது. நடிப்பில் கொடூரத்தை வெளிப்படுத்தி மேலும் பயமூட்டியிருக்கிறார், அந்த வேடத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள்.சித்ரகுப்தனாக நடித்திருக்கும் ரமேஷ்திலக், எம்தர்மனாக ஆசைப்பட்டு செய்யும் வேலைகளில் தற்கால அரசியல் அல்லோலகல்லோலப் படுகிறது.சிவனாக நடித்திருக்கும் நான்கடவுள் ராஜேந்திரன், அமைச்சர் செல்லூர் ராஜூ போல வயலூர் ராஜாக வருகிற போஸ்வெங்கட், சாமியாராக நடித்திருக்கும் கயல்தேவராஜ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். இன்னொருபக்கம் மத்திய அரசின் இந்தித்திணிப்பு மாநில அரசின் சீர்கேடுகள் ஆகியனவற்றைத் தயக்கமின்றி திட்டியிருக்கிறார்கள்.

தமிழக அரசியல் தலைவர்கள் பார்வைக்கு இன்னும் இப்படம் வராததால் சர்ச்சைகள் எதுவுமின்றி தப்பித்துக்கொண்டிருக்கிறார்  இந்த விவகாரமான தர்மராஜா...