’என் கட் அவுட்டுக்கு ஊத்தி வீணடிக்கிற பாலை ஏழைக்குழந்தைகளுக்குக் கொடுத்து ஒரு நேரப் பசியையாவது போக்குங்க. இன்னிக்கும் என்னிக்கும் எனக்கு கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் மட்டும் வேண்டவேண்டாம்’ என்று தனது கட் அவுட்டுக்கு பால் ஊற்றப்போன ரசிகர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு.

யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘பட்டிபுலம்’படம் வெளியாவதையொட்டி யோகிபாபுவின் ரசிகர்கள் சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி தியேட்டர் வளாகத்தில் யோகிபாபுவின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து தங்கள் பிரியத்தை வெளிப்படுத்தப் போவதாக தீர்மானித்திருந்தார்கள். அதன்படி படம் வெளியான இன்று யோகிபாபுவின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து யோகிபாபுவை பெருமைப்படுத்த தயாரானார்கள்.

விஷயம் தெரிந்த யோகிபாபு, காமெடி நடிகனான நம்மையும் சிலர் இந்தளவுக்கு கொண்டாடுறாங்களே, கம்முன்னு அனுபவிப்போம் என்றிருக்காமல் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து, கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்துதான் அன்பைக்காட்ட வேண்டுமென்பதில்லை. உணவுப் பொருளை வீணாக்க வேண்டாம். கட் அவுட்டுக்கு ஊற்ற வாங்கிய பால் பாக்கெட்டுகளை ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களது ஒருநேரப் பசியையாவது போக்க உதவுங்கள்’ என்று தனது உதவியாளர்களை நேரில் அனுப்பி வேண்டுகோள் வைத்தார்.

அவரது வேண்டுகோளையடுத்து கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது ரத்து செய்யப்பட்டது. தனது கட் அவுட்டுகளுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்யச்சொன்ன நடிகர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அபூர்வ நடிகர்.