சென்னையில் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையான யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று ஹாரிங்டன் சாலையில் அதிவேகத்துடன் சென்று கொண்டிருந்தது. அந்த கார் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது வந்த வேகத்தில் மோதியுள்ளது. அருகில் இருந்த கடை ஒன்றின் மீதும் கார் மோதியுள்ளது. கார் மோதிய விபத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்ற அந்த இளைஞர் படுகாயமடைந்தார். 

உடனே அங்கிருந்தவர்கள் இளைஞரை மீட்டு ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் வேறு வாகனத்தில் ஏறி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழில் ‘துருவங்கள் 16’ படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம், பாடம் ஆகிய படங்களிலும் நடித்துள்ள அவர், அதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.